
அன்றாட காய்கறி தேவைகளை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்வதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 52,000 கிராமப்புற சுய உதவி குழு பெண்களுக்கு விதை தொகுப்புகளை வழங்கும் துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று விதை தொகுப்புகளை வழங்கினார். புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 52 ,000 கிராமப்புற சுய உதவி குழு பெண்களுக்கு விவசாய ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கும் நோக்கில் 14 வகை காய்கறி, பழம் மற்றும் கீரை வகைகள் கொண்ட விதை தொகுப்புகளை வழங்கும் துவக்க விழா புதுச்சேரியில் உள்ள குருமாம்பட்டு கலையரங்கம் வளாகத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்துமுதல்வர் ரங்கசாமி பேசுகையில் கிராமப்புற பெண்களுக்கு விதைகள் கொண்ட பாக்கெட்டுகள் வழங்கி அன்றாட காய்கறி தேவைகளை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்வதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும் குடும்ப செலவுகளை குறைக்கவும் விவசாயத்தில் ஈடுபடும் ஆர்வத்தை தூண்டவும் மற்றும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க பெறவும் வழி வகுக்கும் என உரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் தூய்மையான புதுச்சேரியை உருவாக்க முடியும் என உரையாற்றினார்.
மேலும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் சிறப்புரையில் இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் நமது காலநிலைக்கு உட்பட்டு இன்றும் அழியா நிலையில் உள்ள பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உரையாற்றினார். அது மட்டுமில்லாமல் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் நோக்கத்துடன் ஊரக வளர்ச்சித் துறை திட்டத்தின் மூலம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று தனது உரையில் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் ஊரக வளர்ச்சித் துறையின் அரசு செயலாளர் நெடுஞ்செழியன் IAS, திட்ட இயக்குனர் அருள்ராஜன் IFS ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இவ்விழாவில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகர் கார்த்திகேசன் , வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் கிராமப்புற சுய உதவி குழு பெண்கள் பங்கேற்றனர்.

