
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் வேலை பார்த்த நவீன், ஐஸ்வர்யாவுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இருவரின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாகப் பெண்ணின் வீட்டார் தீவிர ஜாதி வெறி கொண்டிருந்துள்ளனர். பெண்ணின் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாகி குடும்பத்திற்கு தெரிந்துள்ளது. இதனால் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வந்த நிலையில், அவரை அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். ஐஸ்வர்யாவை வெளியே விடாமல் ஹவுஸ் அரெஸ்ட் செய்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா மர்மமாக இறந்துள்ளார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்துள்ளனர். இதனிடையே, ஐஸ்வர்யாவை துன்புறுத்திப் பெற்றோர் கொலை செய்ததாகக் காதலன் நவீன் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த பெற்றோரைப் பட்டுக்கோட்டை காவல்துறை கைது செய்தது.
நெய்வவிடுதியைச் சேர்ந்த பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜா ஆகிய இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று இளம்பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதல் திருமணம் செய்ததால் தனது மகளைப் பெற்றோரே கொன்றது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்கள் 15 நாட்கள் காவலில் வைக்க வாய்ப்புகள் உள்ளன.



