மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு நடைபெற்ற நினைவேந்தலில் மகாராஷ்டிர ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் கடல்வழியாக வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் மும்பையில் இந்தியாவின் நுழைவாயில், தாஜ்மகால் விடுதி, சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், மற்றொரு விடுதி எனப் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகள் என 166 பேர் கொல்லப்பட்டனர். மூன்று நாள் நடைபெற்ற பதிலடியில் பயங்கரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டான். இந்தத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் மும்பை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் மகாராஷ்டிர ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் சுனேத்ரா ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தாஜ்மகால் விடுதி அருகே இந்தியாவின் நுழைவாயிலில் நடைபெற்ற நினைவேந்தலில் நடிகை பூமி பெட்னேகர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், இது மும்பையின் மீது நடைபெற்ற தாக்குதல் இல்லை என்றும், இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் தெரிவித்தார்.

