Gautam Gambhir:நிறைய கேப்டன்கள் வருவார்கள் போவார்கள்.. ஆனால் எம்.எஸ்.தோனியின் இடத்தை நிரப்புவது கடினம்!

தோனி போன்ற ஒரு கேப்டன் எப்போதும் இந்தியாவுக்கு கிடைக்க மாட்டார் என்று கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி:இந்திய அணியின் மகத்தான கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படும் எம்.எஸ். தோனி நேற்று தனது 43-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகச் சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் சிறப்பான பினிஷராகவும் போற்றப்படும் அவர் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித், அஸ்வின் போன்ற நட்சத்திரங்கள் உருவாவதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

அதனால் அவருக்கு ஏராளமான முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வரிசையில் இணைந்த கவுதம் கம்பீர் 3 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்த தோனி போன்ற ஒரு கேப்டன் எப்போதும் இந்தியாவுக்கு கிடைக்க மாட்டார் என்று பாராட்டினார்.

இதுகுறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நிறைய கேப்டன்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் இந்திய அணியில் எம்எஸ் தோனியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வெளிநாட்டில் வெல்லலாம். ஆனால் 2 ஐசிசி உலகக்கோப்பை மற்றும் ஒரு சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதை விட மிகப்பெரிய சாதனை இருக்க முடியாது. நாங்கள் மிகப்பெரிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டோம். டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடர், நியூசிலாந்தில் வென்ற டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்க மண்ணில் சமன் செய்த டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை வென்றது போன்ற பெரிய தருணங்களில் நான் அவருடன் இருந்தேன். இன்னும் சில தருணங்களை என்னால் குறிப்பிட முடியவில்லை. அவர் இந்தியாவுக்காக விளையாடிய சிறந்த கேப்டன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *