உயிருடன் இருக்கிறார்.. ஈரானின் சுப்ரீம் லீடர் மோஜ்தபா கமெனி.! வெளியான வீடியோ..

Advertisements

ஈரானின் சுப்ரீம் லீடர் மோஜ்தபா கமெனி தனது சக அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை. இது தொடர்பான, செய்தியை விரிவாக பார்ப்போம்.

ஈரானின் சுப்ரீம் லீடரான அயேதுல்லா கமெனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது மகனான மோஜ்தபா கமெனியும் படுகாயமடைந்தார். தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் போர் மூண்டது. 4 மாத காலம் இந்த போர் நடந்தது. அதே வேளையில், தொடர்ந்து, மோஜ்தபாவுக்கு ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

மோஜ்தபாவின் உடல்நிலை மோசமான இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால், மோஜ்தா உயிருடன் இருக்கிறார் என்று மட்டுமே ஈரான் சொன்னது. ஈரானிய அதிகாரிகள் தரப்பில், “பிப்ரவரித் தாக்குதலில் மோஜ்தபாவிற்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவர் நாட்டின் விவகாரங்களைத் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகிறார்” என  தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிபர் மசூத் பெசெஷ்கியான் அளித்த பேட்டியில், “உச்ச தலைவருடன் தற்போது தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

ஆனால், அவருடனான சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்தது, அரசைத் தொடர்ந்து நடத்துவதற்கு அவரது இருப்பு ஒரு பெரிய பலமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.எனினும், மோஜ்தபா பற்றிய வீடியோ,புகைப்படம் ஒன்றை கூட ஈரான் வெளியிடவில்லை.
மோஜ்தபா கமெனி படுகாயமடைந்துள்ளதாக மேலைநாட்டு மற்றும் எதிர்க்கட்சி உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இஸ்ரேலின் ‘சேனல் 14’ ஊடகம் மற்றும் ‘ஈரான்வயர்’ செய்தி நிறுவனம் ஆகியவை ஈரானிய அரசு வட்டாரங்களை மேற்கோளிட்டு, `மோஜ்தபா கமேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. ஈரானிய உயர்மட்ட தலைவர்களுக்கு இடையே அவரது மறைவு குறித்த தகவல்கள் பரவி வருகிறது.” என தகவல்களை வெளியிட்டன.

அமெரிக்காவுடன் ஈரான் நடத்திய போர் தற்காலிகமாக முடிந்த பிறகு, அயேதுல்லா கமெனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  கமேனியின் உடலுக்கு  ஈரான் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.  தலைநகர் டெஹ்ரான் மட்டுமன்றி, ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய 5 நகரங்களுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர்,  ஜூலை 9-ல் அவரது சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் , தந்தையின் இறுதிச்சடங்கில் கூட மோஜ்தபா பங்கேற்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால், மோஜ்தபா கமேனியின் உடல்நிலை மிகக் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி, அவர் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தன.குறிப்பாக, ‘ஜெருசலேம் போஸ்ட்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில், அவர் இன்னும் சில தினங்களில் உயிரிழக்கக் கூடும் என்றும், அவரது தியாகச் செய்தி வெளியானால் வியப்பதற்கில்லை என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையே, ஈரான் – அமெரிக்கா இடையே ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஒப்பந்த அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு மாதம் கூட முடிவுறாத நிலையில், மீண்டும் அமெரிக்கா – ஈரான் மோதல் வெடித்துள்ளது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கி விட்டது.இதற்கிடையே, சமீபத்தில்  ஈரான்  அதிபர் பெசெஷ்கியான் இருண்ட கண்ணாடி பொருத்திய காரில் முஜ்தபா கமேனியை நேரில் சந்திக்க சென்றதாகவும், ஆனால் அவரது முகத்தைக் கூடப் பார்க்க முடியாத வகையில் ரகசியமான முறையில் அந்த சந்திப்பு அமைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையில், ஈரான் அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட செய்தி ஏஜன்சியான மெகர்  12 விநாடிகள் மட்டுமே ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவில் மோஜ்தபா, சக தலைவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவரது, உடல் நிலையில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. நல்ல உடல் நலத்துடனே இருப்பது போன்று தெரிகிறது. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது. எங்கு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்டதா… அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலையும்  அந்த செய்தி ஏஜன்சி சொல்லவில்லை. நெட்டிசன்கள் ஏஐ வீடியோவாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இஸ்லாமிய மக்கள் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது, உண்மையாக இருக்க வேண்டும் அல்லா என்றும் வேண்டி வருகின்றனர்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோஜ்தபா உயிருடன் இருக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். சவுதி அரேபியாவின் al-Hadath செய்தி நிறுவனம் மோஜ்தபா ஈரான் நாட்டிலேயே இல்லை என்றும் கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *