தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகள் தமிழ்நாட்டின் முற்போக்கு மாற்றங்களுக்கு எதிரானவை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவத்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வெண்ணிலா மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் தேவதாசி முறையை ஆதரித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இக்கருத்துகள் தமிழ்நாட்டின் முற்போக்கு பண்பாட்டு மாற்றங்களுக்கு எதிரானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்ற தலைவர்கள் தீவிரமாக இக்கொடுமைக்கு எதிராகப் போராடியதாகவும், இதன் விளைவாக, 1947 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
பெண் உரிமைக்கு எதிரான இக்கொடுமை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர்கள் ஒரு சிலர் இத்தேவதாசி முறையை ஆதரித்து பேசுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். தேவதாசி முறையை ஆதரிக்கும் நச்சுக் கருத்துக்களை யார் பரப்பினாலும், அதை முற்போக்கு சக்திகள் முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்..

