
சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்ப் பாசம் என்ன மாதிரியானது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று மாலைச் செய்தி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லையென வருந்துகிறார் பிரதமர் மோடி!. நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?. ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?. கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த பிரதமர் மோடியின் கேரண்டிகளில் ஒன்றுதான்,
அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு.
விமானங்களில் மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூடத் தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. ‘எங்கும் இந்தி! எதிலும் இந்தி!’ என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



