விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

Advertisements

பெரம்பூர்:

துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் தொகுதி திமுக சார்பில், ‘’இல்லார்க்கு நாமே உறவு – எல்லோருக்கும் நாமே உறவு’’ என்ற தலைப்பில் 10 கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதற்குத் தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு அரசுத் தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 10 கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேசியது,

திமுக அரசு பெண்களுக்காக ஏற்படுத்திய திட்டங்கள் தமிழ்நாடு மட்டும் இல்லை, இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கு வழிகாட்டும் திட்டங்களாக உள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்குப் புதுமை பெண் திட்டம்மூலம் ஆயிரம், மகளிர் விடியல் பயணம் என்று எண்ணற்ற திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நீதி தேவதையின் ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சி. அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளிக் கொடுக்கும் முதல்வரைப் பார்த்துத் திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்ற கூட்டம் ஒன்று உள்ளது.

தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். அவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக வென்று பதிலளிக்கும். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதிலில், ‘’தமிழ்நாட்டு மக்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வருகிறார்கள்.

கருவறை முதல் கல்லறைவரை தமிழ்நாடு முதலமைச்சரால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களால் நாடு சுபிட்சமாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாகத் தற்குறிகளாகக் களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் நிலைப்பாடு 200தொகுதிகளில் வெற்றி பெறுவது அல்ல, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு. வில்லிலிருந்து புறப்படும் அம்பாகத் திமுக மீது எப்போதெல்லாம் அவதூறு பரப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திமுகவின் தொண்டன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பான்.
2026ல் திமுக தலைவரை மீண்டும் அரியணையில் ஏற்றும் வரையில் எங்களின் பயணம் ஓயாது. வேகம் குறையாது’ என்றார்.

இதில், தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பேசும்போது, ‘’மக்கள் வாழ்க்கையில் பார்க்காத பல்வேறு திட்டங்களைத் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு நாள் கூட நிற்காமல் மக்களுக்காக உழைத்து வருகிறார் துணை முதலமைச்சர். தமிழ்நாட்டில் மக்கள் சந்தோஷமாக உள்ளனர். ஒன்றிய அரசு தமிழ்நாடு கேட்கின்ற நிதியைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்றார். விழாவில், மேயர் பிரியா, பகுதி செயலாளர்கள் நாகராஜன், ஐ.சி.எப். முரளிதரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, 6வது மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *