Migjam Cyclone: திசை மாறும் புயல்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் வரும் 5 ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று, புதுச்சேரிக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 510 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு -தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் மிக்ஜாம் புயல் தீவிர அல்லது அதி தீவிர புயலாக மாறுமா என்பது தொடர்பாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது புயலாகவே கரையை கடக்கும் எனக் கூறப்படுகிறது.

முதலில் இந்தப் புயல் வடக்கு நோக்கிப் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது வங்கதேசம் நோக்கிச் செல்லும் எனப் பல்வேறு மாதிரிகள்மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புற காரணிகளால் அதாவது கடலில் இருக்கும் பிற பகுதிகளில் இருக்கும் அழுத்தம் போன்ற புற காரணிகளால் வடக்கு வடமேற்கு திசையில் நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 5 ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதலில் நேற்று இந்தப் புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது புயலின் திசை சற்று மாறி அந்திராவை நோக்கி நகர்கிறது.

சென்னைக்கு அருகில் கரையை கடக்க இருந்த நிலையில் நாளை உருவாகும் புயல் சென்னையிலிருந்து விலகிச் செல்கிறது. டிசம்பர் 4 ஆம் தேதி சென்னைக்கு அருகில் வந்து செல்கிறது. இதனால் கனமழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா நோக்கிச் செல்கிறது. 5 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் 6 ஆம் தேதி விஷாகப்பட்டினத்திற்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.

நாளை உருவாகும் புயலில் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *