எம்.ஜி.ஆர் முதல் முதல் ஜோசப் விஜய் வரை..சாட்டை எடுத்த தலைவர்கள்..!

தமிழக அரசியல் களத்துல கட்சிகளோட சின்னங்களை மட்டுமில்லீங்க… இன்னும் ஒன்னையும் மறக்க முடியாது. அது சாட்டைங்க… ஆமா, அப்பப்போ அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தச் சாட்டையைக் கையில எடுத்துடுவாங்க…

“ஒரு தவறு செய்தால்,
அதைத் தெரிந்து செய்தால்,
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்!”னு
அன்னைக்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நாட்டில் நிகழும் தவறுகளைக் களைய சாட்டையைச் சுழற்றினார்…
சாட்டை எடுத்து நாட்டைத் திருத்து
இளம் தலைமுறை தனை நீ வழிநடத்து
தீமைக்கெதிராய் நானும் வருவேன்
தனி ஒருவனாய் உன் முன் படையெடுத்துன்னு
இன்னைக்கும் நாட்டைத் திருத்தணும்னா சாட்டையைச் சுழற்ற வேண்டியிருக்கு… உண்மையிலேயே சாட்டை எடுத்துத்தான் நாட்டைத் திருத்த முடியுமோ என்னவோ?

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்துல ஒரு காட்சியில் சாட்டையை எடுத்து சுழற்றுவாரு… இதைப் படத்தோட போஸ்டரா போட்டதோட, எங்க வீட்டுப் பிள்ளை படத்துல எம்.ஜி.ஆர். சாட்டையைத் தூக்குனதையும், விஜய் சாட்டையைத் தூக்குனதையும் ஒண்ணாப் போட்டு, விஜய்தான் எங்களோட எம்.ஜி.ஆர்னு தவெகவினர் கொண்டாடித் தீர்த்தாங்க…

2026 தேர்தல்ல விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் யாருமே எதிர்பார்க்காமல் வெற்றி பெற்றதோட, சில கட்சிகளோட ஆதரவை வாங்கி கூட்டணி ஆட்சியும் அமைச்சி ஆறு மாசம் தாண்டிடுச்சு..ஆனா, என்ன… ஜனநாயகன் படத்துக்காக விஜய் தூக்குன சாட்டையை, இந்த ஆறு மாசத்துல முறையா தூக்கியிருந்தாருன்னா, சட்டம் ஒழுங்கை விடுங்க… அவங்க கட்சி எம்.எல்.ஏ.க்களால ஏற்பட்ட கெட்ட பெயரையாவது தடுத்திருக்கலாம்னு சொல்றாங்க.

பைனான்ஸ் மோசடி, லஞ்சம், பாலியல் வன்கொடுமைகள், பள்ளிக்கூடம் மற்றும் காவல் நிலையங்களில் ரீல்ஸ், பெண் காவலருடன் மோதல், 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், தொண்டர் மீது தாக்குதல், பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி, பெண் எஸ்.பிக்கு  மிரட்டல்ன்னு தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ.க்களும், கட்சிக்காரங்களும் செய்ற அடாவடிகள் குறைஞ்சிருக்கும்…
பனையூர்ல கூட்டம் போடுறாரு… எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் கூப்பிட்டிருக்காரு… இன்னைக்கு வச்சி செய்யப்போறாருன்னு என்னவெல்லாமோ பேசுனாலும், அங்கயும் விஜய் சாட்டையைச் சுழற்றலன்னுதான் சொல்லிக்கிறாங்க… விஜய் சாட்டையைத் தூக்குனாரோ இல்லையோ, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சாட்டையைத் தூக்கியிருக்காரு…
தேர்தல்ல தோல்வி அடைஞ்சி ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில, திமுக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தி கள ஆய்வுக் குழு அமைச்சாங்க. அந்தக் குழு மாநிலம் முழுவதும் ஆய்வு செஞ்சி, கட்சிக்குள்ள ஒழுங்கா செயல்படாதவங்க, தேர்தலப்போ டபுள் கேம் ஆடுனவங்க, தவெகவுக்கு ஆதரவா செயல்பட்டவங்கன்னு நிறைய பேரைப் பத்தி விசாரிச்சி அறிக்கை கொடுத்துச்சு. அதத் தொடர்ந்து ஸ்டாலினும் கட்சிக்குள்ள சாட்டையைச் சுழற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துட்டு இருக்காரு…
இந்த நடவடிக்கையால மாவட்டச் செயலாளர்களோட எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, பல ஆண்டுகளா எந்தவிதமான அங்கீகாரமும் எதிர்பார்ப்பும் இல்லாம உழைச்ச விசுவாசமான தொண்டர்களுக்குக் கட்சிப் பதவி கொடுத்திருக்காங்க…
அதிமுக தரப்புலயும் எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ள சாட்டையைச் சுழற்றுனதாலதான், இன்னைக்கு அதிமுக கதிகலங்கிப் போய் கிடக்கு…
அதிமுக பேனர்ல ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்களில் சிலர் பதவியை ராஜினாமா செஞ்சிட்டு தவெகவுல போய் சேர்ந்துட்டாங்க. அதுல ரெண்டு பேர் இடைத்தேர்தல்ல தவெக தரப்புல போட்டியிட்டு பழையபடியும் எம்.எல்.ஏ. ஆகிட்டாங்க… இன்னும் கொஞ்சம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தாமரை இலைத் தண்ணிபோல, கட்சிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லங்கிற மாதிரி ஒதுங்கிக் கிடக்காங்க… எடப்பாடி எடுத்து வீசுன சவுக்கு அவரோட முதுகிலயும் அடியைக் கொடுத்திருக்கு…

இப்படி சவுக்கெடுத்த அரசியல் தலைவர்கள் வரிசையில, ஒன் மேன் ஆர்மி வைகோவும் சவுக்கெடுத்திருக்கிறது சிப்பு சிப்பாத்தான் வருது…

தென்காசியில நடந்த மதிமுகவோட செயல்வீரர்கள் கூட்டத்துல பேசுன வைகோ, நம்பியாரை எம்.ஜி.ஆர். சாட்டையால் உரி உரினு உரிச்சது போல, மதிமுகவும் சாட்டையைச் சுழற்றும் காலம் வரும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அறிவிக்கின்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மதிமுகவின் பொறுப்புன்னு சொல்லியிருக்காரு…
அதெல்லாம் சரிங்க… மதிமுகவுல போட்டியிட்டு ஜெயிச்ச இரண்டு எம்.எல்.ஏ.க்களே வைகோ சொல்றதைக் கேக்கலியே… அவங்களா என்ன செய்யப்போறாங்கன்னு கூட்டத்துல இருந்து நைசா கிண்டல் அடிச்சிருக்காங்க சிலர்…இந்தச் சாட்டை விவகாரம் அரசியல்ல ஃபேமஸ் ஆகுறதுக்கு முக்கியமான ஒருத்தர் காரணமா இருந்தாரு… அவருதான் மருத்துவர் ராமதாஸ்…
வன்னியர் சங்கத்தைப் பாட்டாளி மக்கள் கட்சியா மாத்துன காலத்துல, என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சிப் பதவிக்கோ, ஆட்சிப் பதவிக்கோ வரமாட்டாங்க… அப்படி வந்தால் என்னை முச்சந்தியில நிறுத்தி சாட்டையால அடிக்கலாம்னு பகிரங்கமா சத்தியம் செஞ்சிருந்தார்…
ஆனா, இன்னைக்கு என்னாச்சு? அவரது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகுபார்த்தாரு… ஒருகட்டத்துல அப்பாவுக்கும் மகனுக்குமே கட்சி யார்கிட்ட இருக்குன்னு தகராறாகி, மாம்பழச் சின்னம் யாருக்குன்னு கோர்ட்டு வரைக்கும் போச்சு. இப்ப அன்புமணியே பாமகவோட அதிகாரப்பூர்வ தலைவராகிட்டாரு…
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை இருந்த காலகட்டத்துல, தைலாபுரம் தோட்டத்துல செய்தியாளர்கள்கிட்ட பேசுன ராமதாஸ், சத்தியத்தை மீறி நான் தான் என் மகனைக் கட்சிக்குள்ள கொண்டுவந்து பதவி வழங்கிட்டேன்… சத்தியத்தை மீறுனதுக்காக என்னை முச்சந்தியில நிறுத்தி சாட்டையால அடிங்கன்னு உருகியிருந்தாரு…
அரசியல்ல சாட்டை எடுத்தாருங்கிறது ஒரு அதிரடி நடவடிக்கையைக் குறிச்சாலும், ஒரே ஒரு அரசியல் கட்சித் தலைவர் மட்டும் தன்னையே சாட்டையால, அதாங்க சவுக்கால அடிச்சுக்கிட்டாரு… அவரு பாஜகவோட தலைவரா இருந்த அண்ணாமலைதான்…சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டிச்சும், அன்றைய திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 2024 டிசம்பர் 27ஆம் தேதி அன்னைக்கு கோவை காலப்பட்டியில உள்ள தன்னோட வீட்டுக்கு முன்னாடி சாட்டையால அடிச்சிக்கிட்டாரு…
இதுல என்ன சுவாரஸ்யம்னா, அண்ணாமலை அடிச்சிக்கிறதுக்காகத் தடிமனான கோயில் சாட்டையை நிர்வாகிகள் வாங்கி வச்சிருந்த நிலையில, அதுக்குப் பதிலா நூல்கயிற்றால் ஆன லேசான சாட்டையை வாங்கி அண்ணாமலை அடிச்சிக்கிட்டாரு… இந்த சாட்டை இன்னும் என்னென்ன அரசியலை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *