சென்னைக்கு ஆபத்து.. தமிழகத்தை தாக்கும் ‘அக்வான்’ புயல்.!வானிலை எச்சரிக்கை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது மத்திய மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் இந்தப் புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 19ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் துனி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தென் தமிழகம், வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், நவம்பர் 23ஆம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். 18ம் தேதி அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 17ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், நவம்பர் 18ஆம் தேதி மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 19ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டராக அதிகரித்து, இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடும். இதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 100 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அக்வான் புயல் ஆந்திரக் கடற்கரையை நெருங்கும் நிலையில், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுமக்களும் மீனவர்களும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆக அக்வான் புயலால் தமிழகம் தத்தளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *