பாகிஸ்தான் அரசியலில் அதிகார மாற்றங்களும், முன்னாள் பிரதமர்கள் சிறைக்குச் செல்வதும் புதிதல்ல. ஆனால், ராவல்பிண்டி ஆடியாலா சிறையிலிருந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதம், அந்நாட்டின் அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..உயிருக்கே ஆபத்து.. காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள் சிறையிலிருந்து உயிருடன் திரும்புவேனா என்பதே சந்தேகம்தான்” என இம்ரான் கான் வெளியிட்டுள்ள கடிதத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!
ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கான், பாகிஸ்தானின் உச்ச அதிகாரம் கொண்ட நீதிபதிகளுக்குத் தனது கைப்பட உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை அவரது வழக்கறிஞர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டது முதல், சர்வதேச அளவில் இது பெரும் விவாதமாக மாறியுள்ளது.அந்தக் கடிதத்தின் தொடக்கத்திலேயே இம்ரான் கான் குறிப்பிட்டிருக்கும் வரிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன.. அதாவது, நான் இந்தக் கடிதத்தை ஒரு முன்னாள் பிரதமராகவோ அல்லது ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவோ எழுதவில்லை. பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாடியவன், மக்களுக்காகத் தொண்டாற்றியவன் என்ற முறையில் எழுதுகிறேன்.
இந்தச் சிறைச் சுவர்களைத் தாண்டி என் குரல் வெளியுலகிற்குக் கேட்க எனக்கு இருக்கும் ஒரே வழி இது மட்டும்தான்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி முதல், ஒரு நாளைக்குச் சுமார் 22 மணி நேரம் வரை தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், வெளியுலகத் தொடர்பே இல்லாமல் தவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனிமைச் சிறை ஒருபுறம் என்றால், மறுபுறம் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வைத் திறனை இழந்துவிட்டதாக இம்ரான் கான் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கடுமையான உயர் ரத்த அழுத்தம் காரணமாக எந்த நேரத்திலும் மாரடைப்போ அல்லது பக்கவாதமோ ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்களே எச்சரித்துள்ளனர்.இதில் மிகப்பெரிய முரண் என்னவென்றால், தன் வாழ்நாளில் ஏழை மக்களுக்காகக் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் பிரம்மாண்ட மருத்துவமனைகளைக் கட்டியெழுப்பிய ஒரு தலைவருக்கு, இன்று சிறைக்குள் அடிப்படை மருத்துவ சிகிச்சை கூட மறுக்கப்படுகிறது என்பதுதான்.
தனக்கு மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை மருத்துவக் குழு பரிந்துரைத்த சிகிச்சைகளைக் கூட அதிகாரிகள் நிறைவேற்ற மறுப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனரான இம்ரான் கான், 2018-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், 2022 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தனது ஆட்சியை இழந்தார். அதைத் தொடர்ந்து, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் பல வழக்குகள் பாய்ந்தன.
குறிப்பாக, அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதன் காரணமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ராவல்பிண்டி ஆடியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.தனது கடிதத்தின் இறுதியில் இம்ரான் கான் வைத்திருக்கும் கோரிக்கை மிக எளிமையானது, ஆனால் வலிமையானது:”எனக்கு எந்தச் சிறப்புச் சலுகையும் தேவையில்லை.
நான் உயிருடன் இருந்தால் மட்டுமே ‘நான் நிரபராதி’ என்பதை இந்த உலகிற்கு நிரூபிக்க முடியும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, எனக்கும் என் மனைவிக்கும் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யுங்கள்.மனிதநேயத்தின் அடிப்படையில் காலம் கடந்து விடும் முன் எனக்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்” என நீதிபதிகளிடம் அவர் முறையிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசியலில் ஒரு சகாப்தமாக வலம் வந்த இம்ரான் கானின் இந்தக் குரலுக்கு நீதித்துறை செவிசாய்க்குமா? அல்லது சிறைச் சுவர்களுக்குள்ளேயே அவரது போராட்டம் முடக்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.