
சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் தனித்தனியாகத் தேர்களில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நடக்கும் அஷ்டமி சப்பர திருவிழா, அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படியளந்த லீலையைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி சப்பர திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் தனித்தனியாகத் தேர்களில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்தத் தேர்கள், கீழமாசி வீதியிலிருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைந்தது. மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர்.
தேர்கள் வீதி உலா சென்றபோது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பதை விளக்கும் விதமாக அரிசியை மக்கள் வீதிகளில் போட்டுச் சென்றனர். தரையில் சிதறிக்கிடக்கும் அரிசியை பக்தர்கள் சேகரித்து தங்களின் வீட்டில் வைத்து வேண்டினால், அள்ள, அள்ளச் சாப்பாடு கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

