புலியை துரத்தியதாக அமைச்சர் வன்னி அரசு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலியை துரத்தியதாக அமைச்சர் வன்னி அரசு மீது எழுந்த புகார் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி மசினகுடி பகுதியில் அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்திச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் கந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அமைச்சர் வன்னி அரசின் செயல்பாடு வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானதாக இருக்கலாம் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் முத்துக்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொதுவாக வழக்குத் தொடர முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டதாக தெரியவந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசு மீதான புகார் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பு வன்னி அரசு தொடர்பான வீடியோ சர்ச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *