Manakula Vinayagar Temple Elephant Lakshmi: சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி!

Advertisements

புதுவை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானையின் முதலாம் ஆண்டு நினைதினத்தை முன்னிட்டு நினைவிடத்தில்  பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய் ஆகியவற்றை வைத்துப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி: புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
புதுவைக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களும் சுற்றுலா பயணிகளும் மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து லட்சுமி யானையிடம் ஆசி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிரு ந்தனர்.

அதோடு லட்சுமி யானைக்கு வாழைப்பழம், அருக்கம்புல், போன்றவற்றை வழங்கி மகிழ்வார்கள், குழந்தைகளும் ஆவலோடு யானைமீது அமர்ந்து மகிழ்வார்கள்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் யானையின் வசிப்பிடமான ஈஸ்வரன் கோவில் வீதியிலிருந்து அதிகாலை நடை பயிற்சி சென்றபோது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மயங்கிச் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் உடலைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். யானையின் உடலுக்கு மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது இந்தியா முழுவதுமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யானை உடல் அடக்கம் செய்யும் வரை பொதுமக்கள் சோகமாகவே இருந்தனர். தொடர்ந்து யானை நினைவு இடத்தில் தினமும் பக்தர்கள் பால் ஊற்றி வணங்கி வந்தனர்.

இந்த நிலையில் யானை லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று நடைபெற்றது. வனத்துறை அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானை லட்சுமி நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிறப்புப் பூஜை செய்து புனித நீரை யானையின் நினைவிடத்தின் மீது ஊற்றிச் சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமானோர் யானை லட்சுமிக்கு பிடித்தமான ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா, வாழை போன்ற பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய் ஆகியவற்றை வைத்துப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *