M. S. Swaminathan: காலமானார்!

இந்திய பசுமை புரட்சியின் தந்தையென அழைக்கப்படும் எம்எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாகச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலைக் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வேளாண் பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர் எம்.எஸ். சுவாமிநாதன். பள்ளிப்படிப்பை  முடித்தபின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் கல்லூரியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றியபிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ் பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர், தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளைப் பெற்றவர். பெருமைமிகு மகசேசே விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காகக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருதையும் அவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *