மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய சர்ச்சை முற்றுப்பெறுவதற்கு முன்பே, நள்ளிரவில் பெண் காவல் அதிகாரியிடம் ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் அமைச்சர் மிரட்டிய ரீல்ஸ் வீடியோ வெளியானது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஆய்வு ரீல்ஸ் வீடியோவுக்குத்தான் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கோபத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான இன்பதுரை தனது எக்ஸ் தளப் பதிவில், உள்துறையும் முதலமைச்சர் விஜய்யின் வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் மீது Cr.No.479/2024, Cr.No.140/2026 என இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை? எனவும் வினா தொடுத்துள்ளார். ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?
காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும் தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுகிறதா? எனவும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆய்வு என்ற பெயரில் பெண் காவல் அதிகாரியை மிரட்டி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து ரீல்ஸாக வெளியிட்டதுதான் உங்கள் ஆட்சி முறையா? என முதலமைச்சர் விஜய்க்கும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவல்துறையினரை மிரட்டுவதும், பெண் அதிகாரியின் கண்ணியத்தைச் சமூக வலைதளப் பிரபலத்துக்காகப் பயன்படுத்துவதும் அதிகார அத்துமீறலின் உச்சம் என விமர்சித்துள்ளனர். மேலும், பெண்கள் பாதுகாப்பு, அதிகாரிகளின் சுதந்திரம், தூய்மையான ஆட்சி என மேடைகளில் பேசிய விஜய், அமைச்சர் காந்திராஜின் இந்தச் செயலுக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? குறைந்தபட்சம் கண்டிக்கக்கூடத் துணிவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? அல்லது இதுதான் தவெக ஆட்சியின் மாதிரியா? என முதலமைச்சர் விஜய்யை நோக்கியும் சரமாரியான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

