M. K. Stalin: இது பழிவாங்கும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

Advertisements

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது மூலம் பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராஞ்சிக்கு ரகசியமாக திரும்பினார். அவர் விமானத்தில் வராமல், தனி காரில் ரகசிய வழியாக வந்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஏற்கெனவே, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஞ்சியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பிற்பகல் 2 மணி முதல் முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது மூலம் பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது வெளிக்காட்டுகிறது. பா.ஜ.,வின் அநாகரிகமான யுக்திகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பணிந்து போகாமல் ஹேமந்த் சோரன் வலுவுடன் எதிர்த்து நிற்கிறார். அடக்குமுறைகளை தாண்டி பா.ஜ.,வுக்கு எதிரான போரில் உறுதி காட்டும் சோரனின் நிலைப்பாடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *