
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.810 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்துப் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:”தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் இருக்கிறது. இங்கு விழா நடப்பது சரியானது. நாமக்கல்லில் கலைஞர் சிலை திறந்திருப்பது பொருத்தமானது. புதுமைப் பெண் திட்டத்தில் நாமக்கல்லில்தான் அதிக அளவிலான மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் 2ஆவது மாநிலமாக நாமக்கல் உள்ளது.
நாமக்கல்லை மாவட்டமாக உயர்த்தியவர் கருணாநிதி. மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது திமுக அரசு.
நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ரூ.10 கோடி ஒதுக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரடியாகச் சென்று, கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்”.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரம் கொண்ட, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நண்பகல் 1.45 மணி அளவில் திறந்து வைத்தார். மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் உருவச்சிலை அருகில் அமைந்து உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அவர் வணங்கினார்.


