
திரைத்துறையில் பாடல் எழுதுவது என்பது பல காலம் தொட்டு இருந்து வரும் சுவாரசியம்.
எத்தனையோ கவிஞர்கள் கவிதைகளை வெளியிட்டு தங்கள் திறனை வெளிப்படுத்தி வந்தாலும், மெட்டுக்கு சந்தம் சேர்ப்பது ஒரு சவாலான பணியே. தமிழ் சினிமாவில் அப்படி பல ஆளுமைகள் தற்போது வரை இருந்து வருகின்றனர்.
இப்படி பாடலாசிரியர் என்கிற பணியை பற்றி சிந்திக்கும் போது நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, வைரமுத்து என்கிற ஜாம்பவான்களின் பெயர்கள் தான். இவர்கள் திரைத்துறைக்கு கொடுத்த பொக்கிஷங்கள ஏராளம். இவர்கள் இருந்த காலத்தில் வரிகளுக்கு இசை சேர்ப்பது தான் வழக்கமான பணியாக இருந்து வந்தது. மிகவும் குறைந்த விகிதத்தில் தான் இசையமைப்பாளர் மெட்டை கொடுத்து அதில் வரிகளை தீட்ட சொல்வார்.
இவர்களின் வழி சுவடுகளை பின்பற்றி பல கவிஞர்கள் அதாவது புதிய தலைமுறை கவிஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் அதாவது 2000 ஆம் ஆண்டில் இருந்து இந்த லெஜன்ட் கவிஞர்களுக்கு போட்டியாக பல புதிய விரல்கள் வரிகள் தீட்ட துவங்கின.
நா.முத்துக்குமார், பா.விஜய், சினேகன், யுகபாரதி, தாமரை, விவேகா, கபிலன் என இப்படி கூறலாம். இவர்கள் அனைவருமே இதுநாள் வரையில் பிஸியாக வலம் வரும் கவிஞர்கள். இவர்களில் கவிஞர் கபிலன் பாடல் எழுத வந்த சுவாரசியமான கதையை ஒரு நேர்காணலில் கூறி இருந்தார் மற்றும் அவர் எப்படி தெனாலி படத்துக்கு பாடல் எழுத வந்த வாய்ப்பை நழுவ விட்டார் என்பதையும் கூறி இருந்தார்.
ஆம், பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த போது இயக்குனர் ஒருவர் அங்கே வந்துள்ளார். அப்போது, என்ன கவிஞரே நீங்கள் பாடல் வாய்ப்பை தேடி கொண்டிருப்பீர்கள் என்று பார்த்தால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் திருமணம் செய்து கொண்டு விட்டேன் வாழ்வை நகர்த்த வேண்டும் அதனால் இந்த பணி செய்து கொண்டிருக்கிறேன் என்றாராம். மேலும், உங்களால் முடிந்தால் உலக நாயகன் கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்கவே உடனடியாக அவரின் appointment வாங்கி அவரை சந்திக்க வைத்தாராம்.
அப்போது கபிலன் கமலை சந்தித்து தான் ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளதாகவும் இதோ அதன் பிரதி உங்கள் கருத்தை கூறுங்கள் மேலும் நீங்கள் வந்து என்ன வாழ்த்த வேண்டும் இதோ அதன் தேதிகள் என்றாராம். நிச்சயம் வருகிறேன் என கூறிய கமல் விழாவுக்கு வந்து வாழ்த்து கூறினாராம். அதோடு, நான் தெனாலி என்கிற படத்தில் நடிக்க உள்ளேன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார அவர்களிடம் உங்களை பற்றி கூறி உள்ளேன் சென்று சந்திக்கவும் என்றாராம்.
அந்த சந்திப்பில் கே எஸ் ரவிக்குமார, இசைப்புயல் ரஹ்மான் அவர்களிடம் கபிலனை அறிமுகம் செய்து வைத்து இவருக்கு ஒரு பாடல் கொடுக்க வேண்டும் என கூறவே. அதற்கு ரஹ்மான் ஓகே சொல்லி மூன்று மெட்டுக்களை கொடுத்து உள்ளாராம்.
ஆனால், ஒரே நேரத்தில் இதனை பெரிய ஜாம்பவான்களின் கூட்டணியில் இணைவது அவருக்கு சிக்கலாக இருந்ததாம். மேலும், மெட்டுக்கு எழுத பயிற்சி இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பை இவர் மறுக்கவே அது வேறு ஒரு பெரிய கவிஞருக்கு சென்று விட்டதாம். அதன் பிறகு இசைப்புயல் அவர்களின் ஆஸ்தான கவிஞர்கள் வரிசையில் இன்று கபிலன் நிறைய பாடல்கள் எழுதி விட்டார் என்பதுதான் வரலாறு.



