
காதல் கைகூடாததால் காதலியைப் போட்டுத் தள்ளிய காதலன்!
காதலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அதே கத்தியால் காதலன் தனது கழுத்தையும் அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மகளைப் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், கிஷன் சைனி உடனான காதலை கைவிட முடிவு செய்தார்.
இதுதொடர்பாகக் கிஷன் சைனியிடம் இளம்பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், நைசாகப் பேசி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் காதலியின் கழுத்தை அறுத்துத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து அதே கத்தியால் தனது கழுத்த அறுத்துக் கொண்டுள்ளார். அவ்வழியாகச் சென்றவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கிஷன் சைனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




