
புதுடெல்லி:பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறுவது பிரதமர் மோடியின் எதிர்க்கட்சிகள்மீதான உளவியல் போர் என்று, பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பிரதமர் மோடியும் பாஜகவும் தேர்தல் பிரச்சாரத்தை முனைப்புடன் தொடங்கி விட்டனர். எடுத்த எடுப்பிலேயே பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் பாஜக கூட்டணி 400 தொகுதிகளைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக மீண்டும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பிரதமர் மோடி கூறி வந்தார்.
இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குத் தொடக்கத்திலேயே ஒரு அதிர்ச்சி வைத்தியமாக மாறிவிட்டது. இதே பாணியில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அளவுக்குத் தான் தங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பது போல் பேசி வந்தனர்.
மக்கள் மத்தியில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்பது போன்ற ஒரு மனப்பாங்கை ஏற்படுத்த வேண்டும் என்பது பாஜகவுக்கு தெரிந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதை உறுதிப்படுத்துவது போல் பிரபல அரசியல் வியூக ஆய்வாளரும் தேர்தல் நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தற்போது கருத்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சி 370 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இது உண்மையில் சாத்தியமாகக்கூடிய காரியம் அல்ல. எதிர்க்கட்சிகள்மீது அவர் தொடுத்திருக்கும் உளவியல் போரின் ஒரு அங்கமாகவே இதைப் பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில், பாரதிய ஜனதா கடந்த தேர்தலில் பெற்றிருந்த தொகுதிகளைவிட கணிசமான அளவில் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றலாம். அதாவது 10 முதல் 20% வரை கூடுதல் இடங்களை அவர்கள் பெறலாம். (கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது).
நிதிஷ் குமாரின் தாக்கம்
இந்தத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை தங்கள் அணிக்குக் கொண்டு வந்ததன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தைப் பாரதிய ஜனதா ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரை ஐக்கிய ஜனதா தளத்திற்கும் தொகுதி பங்கீடு செய்து கொடுக்க வேண்டியது இருப்பதால் குறைந்த அளவிலான தொகுதி களில் தான் பாஜகவால் வெற்றி பெற முடியும். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற முடியும்.
ஒருவேளை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 370 முதல் 400 தொகுதிகள்வரை கைப்பற்றினாலும் பாஜக ஒரு பெரிய கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முடியாது. காங்கிரஸ் கட்சி தனது வெற்றியின் உச்சாணி கொம்பில் இருந்தபோது நாடு முழுவதும் உள்ள நான்காயிரம் எம்எல்ஏக்களில் 2500 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக இருந்தனர்.
அதே நேரத்தில் பாஜக உச்சபட்ச வெற்றி நிலையில் இருந்தபோது கூட 1500 முதல் 1600 எம்எல்ஏக்கள் வரை தான் வெற்றி பெற்று இருந்தனர்”.இவ்வாறு அவர் கூறினார்.



