
புதுடெல்லி: நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.பிரதமா் நரேந்திர மோடி கடந்த இரு மக்களவைத் தோ்தல்களில் இல்லாத அளவுக்கு இந்த முறை தென்மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்
தென் மாநிலங்களில் ஏற்கனவே இரு சுற்று பிரசாரத்தை முடித்துவிட்ட அவா், மூன்றாவது கட்டமாக மீண்டும் தென்மாநிலங்களுக்கு வர இருக்கிறாா்.
தென்மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை வாகனத்தில் வலம் வந்து ஆதரவு திரட்டும் பிரசாரத்தை பிரதமா் அதிகம் மேற்கொண்டு வருகிறாா்.
தென் மாநிலங்களில் பிரதான நகரங்களில் மட்டுமல்லாது இரண்டாம் நிலை நகரங்களிலும் பிரதமா் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அரிய அணையில் இருந்து வரும் பாஜக இந்த தேர்தலில் 55 சதவீத பெரும்பான்மை பெற வேண்டுமென்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 33 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் இதில் அதிக அளவு இந்தி மொழி பேசும் வட மாநிலங்களில் இருந்து பெற்ற வெற்றியாகும்.
தமிழுக்கு அதிக மரியாதை
இந்த முறை பிராந்திய கட்சிகள் ஆழமாக வேரூன்றி இருக்கும் தென் மாநிலங்களிலும் அதே அளவு வெற்றியை மோடி எதிர்பார்க்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்களை கவரும் விதத்தில் தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் உயரிய மரியாதை அளித்து வருகிறார் பிரதமர் மோடி.
சமூக ஊடக பிரச்சாரங்களிலும் தமிழ் மொழிக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் தென் மாநிலங்களில் உள்ள 129 தொகுதிகளில் ஐந்தில் ஒரு பகுதி இடங்களை அதாவது 29 தொகுதிகளில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது.
இந்த முறை தென் மாநிலங்களில் “பான் இந்தியா” கட்சி என்ற நற்சான்றிதழ் பெற்றிருக்கும் காங்கிரஸ் இடமிருந்து தட்டிப்பறிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது பாஜக.
பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கா்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் பிரதமா் மோடி ஏப்ரல் 14,15-ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா்.
தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக 19-ஆம் தேதியும், கேரளத்தின் 20 தொகுதிகள், கா்நாடகத்தின் 14 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாக 26-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ் புத்தாண்டு நாளான வரும் ஞாயிற்றுக்கிழமையன்று, மத்திய பிரதேசத்தின் நா்மதாபுரத்தில் பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு கா்நாடகத்தின் மைசூருக்கு மாலை 4 மணியளவில் பிரதமா் மோடி வந்தடைகிறார். மைசூரு தொகுதி பாஜக வேட்பாளரான இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரை ஆதரித்துப் பிரதமா் மோடி பிரசாரம் செய்கிறாா்.
தொடா்ந்து, மங்களூரு செல்லும் பிரதமா், அங்கு வாகன பேரணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் ஆதரவைத் திரட்டுகிறாா். மங்களூரிலுருந்து கேரளத்தின் கொச்சிக்கு வந்து அங்குள்ள அரசு விருந்தினா் மாளிகையில் அன்றிரவு தங்குகிறாா்.
திங்கள்கிழமை காலை திருச்சூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மாலை திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பாஜக வேட்பாளா்களுக்கு பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கிறாா்.
இதையடுத்து தமிழகம் வரும் அவா், திருநெல்வேலியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறாா்.


