சென்னை: மது விற்பனைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல்லில் சீமான் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: போலீசாருக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு சங்கம் இல்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும். அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க விடுமுறை அவசியம். தமிழர்களின் அறிவியல், தொழில்நுட்பத்துடன் யாரும் போட்டி போட முடியாது.
விவசாய பெருமக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மத்திய பா.ஜ., அரசு வேளாண் விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யவில்லை. இ.பி.எஸ்., முதல்வராக இருந்த போது விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்தது.
திமுக, அதிமுக, பா.ஜ., ஆகிய எந்தக் கட்சிகளும் விவசாயிகளின் வளர்ச்சியைக் கண்டு கொள்ளவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு சீமான் பேசினார்.


