Krishnagiri:பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது!

Advertisements

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (32 வயது). இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்தார். இவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பயிற்றுனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அம்மாணவி தன் பெற்றோரிடம் அழுதவாறு கூற, அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் சிவராமன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சிவராமனை தேடி வந்தனர்.

இதனிடையே சிவராமனை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கிக் கட்சி தலைமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

என்.சி.சி. பயிற்சியாளரும் முன்னாள் நா.த.க. நிர்வாகியுமான சிவராமனை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *