கொட்டில்பாட்டில் மீண்டும் கடல் சீற்றம்-ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!

Advertisements

குளச்சல் : குமரி மாவட்டத்தில் ஜூன்,ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.இதில் பழைய ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடலரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தன.

இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்து மேற்கு சாலை துண்டிக்கப்பட்டது.மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது.பள்ளம் விழுந்த பகுதியில் மணல் போட்டு நிரப்பப்பட்டது.இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட கடலரிப்பில் பழைய ஆலயம் அருகில் உருவான பள்ளத்தில் பெரும் மணலரிப்பு ஏற்பட்டது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ.மற்றும் கொட்டில்பாடு மீனவர்கள் அங்கு கடலரிப்பு காலங்களில் வீடுகளை பாதுகாக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். கலெக்டரின் உத்தரவுப்படி அங்கு கிழக்கு,மேற்கு அலை தடுப்பு சுவர்களை இணைக்கும் வகையில் பள்ளத்தில் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு ராட்சத கற்கள் போட்டு நிரப்பப்பட்டது.இதனால் பழைய ஆலயம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் முதல் கொட்டில்பாட்டில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி விழுகிறது. எனவே கொட்டில்பாடு பகுதியில் உள்ள வீடுகளை பாதுகாக்க நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *