Kolkata Building Collapse: 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

Advertisements

கொல்கத்தா: கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை அந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீ அணைப்புப் படை, காவல்துறையின் பேரிடர் நிர்வாகக் குழு ஆகியவை தீவிரமாக ஈடுபட்டன.

இந்நிலையில், இந்த விபத்துகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதில் இருவர் பெண்கள். 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சட்டவிரோதமாக 5 மாடி கட்டிடத்தைக் கட்டிய நிலத்தின் உரிமையாளர் முகம்மது வாசிம் என்பவரை நாங்கள் கைது செய்துள்ளோம். (நேற்று) இரவு 8 மணி அளவில் ஒருவரின் உடலை நாங்கள் கைப்பற்றி, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இறந்தவர், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மேஸ்திரி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து நேரிட்ட பகுதி மிகவும் நெரிசல் மிகுந்தது என்பதால், பெரிய மீட்புக் கருவிகளைக் கொண்டு வர முடியவில்லை. இதனால், சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன” எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *