சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் தனக்கு 3 லட்சம் கிடைக்கும் !

ஒரு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் எல்லாச் செலவும் போகத் தனக்கு மூன்று இலட்ச ரூபாய் கிடைக்கும் என்று மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பேசிய வீடியோவைப் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை நெசவாளர்களிடம் இரண்டு இலட்ச ரூபாய், மூன்று இலட்ச ரூபாய்க்குச் சிறுநீரகத்தைப் பெற்று ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பணக்கார நோயாளிகளுக்குப் பெருந்தொகை பெற்றுக்கொண்டு மாற்றுச் சிறுநீரகம் பொருத்திதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கிட்னித் திருட்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. அதற்கு விளக்கமளித்த அமைச்சர் சுப்பிரமணியன் இது திருட்டு இல்லை என்றும், முறைகேடு என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை நடைபெற்ற மருத்துவமனையின் உரிமையாளரும் மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன், ஒரு சிறுநீரகம் பொருத்தினால் செலவுபோக மூன்று இலட்ச ரூபாய் கிடைக்கும் என்று கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. இப்படி இருந்தால் ஊரில் உள்ள கிட்னிகளை எல்லாம் கழற்றினால்தான் தன் தந்தை வைத்துள்ள பதினாலரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க முடியும் எனக் கூறிக் கதிரவனும் சுற்றியுள்ளவர்களும் சிரிக்கும் காட்சியைப் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *