
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக்குழு நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்தநிலையில், கரூர் பலி சம்பவம் தொடர்பாக, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றிக்கழகத்தின் செயலை, நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது என்றும், என்ன மாதிரியான கட்சி இது. கரூர் துயரத்திற்கு, தமிழக வெற்றிக்கழகம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்றும், இது, அக்கட்சி தலைவரின் மனநிலையை காட்டுகிறது எனவும், அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பை கூட, தமிழக வெற்றிக்கழகம் பின்பற்றவில்லை என்றும் நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார்.
மேலும், கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்படுகிறது என்றும், வழக்கின் ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் உடனே ஒப்படைக்க, கரூர் காவல்துறையினருக்கு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதனையடுத்து விசாரணையின் நிறைவாக, விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி செந்தில்குமார் முடித்துவைத்தார்.
