
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசிய கமல்ஹாசன், “ராஜ்குமாருடைய குடும்பம் கர்நாடகாவில் இருக்கும் தனது குடும்பம்” என்றும், “அவர் விழாவுக்கு வந்திருப்பதால் தான் தன்னுடைய பேச்சை தொடங்கும் போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கியதாகக்” கூறினார். மேலும், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்றும் கூறினார் . கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், கமலுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. கமலுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாமே தமிழில் இருந்து வந்த மொழிகள்தான். தன் வரலாற்றை அறிந்து கொள்ளாத, உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.


