OTT Updates : ஓ.டி.டி.-யில் தவற விடக் கூடாத கமல்ஹாசன் படங்கள்!

Advertisements

தியேட்டர்களில் படம் பார்ப்பது போன்று சினிமா ரசிகர்கள் தற்போது ஓடிடி தளங்களில் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சமீபத்தில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மிக அதிக தொகைக்கு முன்னணி ஓடிடி நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஓடிடி தளங்கள் ரசிகர்கள் விரும்பக்கூடிய ஏராளமான திரைப்படங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “ஹேராம்”, “அன்பே சிவம்”, “விக்ரம்” உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்கள் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றைக் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் அதிக முறை பார்த்து வருகிறார்கள்.

“ஹேராம்” : கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, வசந்தரா தாஸ், கிரிஷ் கர்னாட் நடிப்பில் இந்தத் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா வரலாற்றில் “ஹேராம்” திரைப்படம் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தைக் கமல்ஹாசன் எழுதி இயக்கியிருந்தார். பீரியட் ஆக்சன் டிராமா ஜானரில் இந்தத் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை மற்றும் மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தத் திரைப்படம் உருவானது. இந்தப் படத்திற்கு ஐஎம்டிபி 7.9 புள்ளிகளைக் கொடுத்துள்ளது.

“அன்பே சிவம்” : மாதவன், கிரண் ரத்தோடு, நாசர், சந்தான பாரதி, சீமா, உமாரியாஸ்கான் உள்ளிட்டோர் இடம்பெற்ற இந்த “அன்பே சிவம்” படத்தைச் சுந்தர் சி இயக்கியிருந்தார். 2003இல் இந்தத் திரைப்படம் வெளிவந்தது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். ஃபீல் குட் காமெடி டிராமா ஜானரில் இந்தப் படம் வெளிவந்தது. இந்தப் படத்திற்கு கமல்ஹாசன் கதை எழுதி இருந்தார். இன்றைக்கும் இந்தத் திரைப்படம் அதிக முறை பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது.

“நாயகன்” : கமல் மற்றும் மணிரத்தினத்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக “நாயகன்” அமைந்தது. 1987இல் வெளிவந்த இந்தப் படத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் வீடியோவில் இந்தத் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. வேலு நாயக்கர் என்ற கேரக்டரில் கமல்ஹாசன் அவராகவே வாழ்ந்திருப்பார். வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி இந்த “நாயகன்” திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் தான் முதன் முறையாகக் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணி இணைந்தது. இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இன்றைக்கும் பிரபலமாக உள்ளது.

“பஞ்ச தந்திரம்” : 2002இல் வெளிவந்த இந்த “பஞ்சதந்திரம்” திரைப்படத்தைக் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இந்தத் திரைப்படம் உள்ளது. கமல்ஹாசனுடன் ரமேஷ் அரவிந்த், ஜெயராம், ஸ்ரீமன், யோகி சேது, ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், நாகேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். காமெடி ஜானரில் இந்தத் திரைப்படம் வெளிவந்தது. இதற்குக் கமல்ஹாசனும், மறைந்த கிரேசி மோகனும் கதை எழுதி இருந்தனர். இந்தப் படத்தில் வரும் காட்சிகள் இன்றைக்கும் பிரபலமாக உள்ளது.

“விருமாண்டி” : 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் பசுபதி, அபிராமி, நெப்போலியன், ரோகிணி, சண்முகராஜன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை எழுதி, இயக்கி, கமல்ஹாசன் தயாரித்திருந்தார். படத்தில் இணை எடிட்டராகவும் கமல்ஹாசன் பணியாற்றினார். இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்கு பலம் சேர்த்தது. இந்தப் படத்திற்கு 8.4 புள்ளிகள் வழங்கி உள்ளது ஐஎம்டிபி தளம்.

“புஷ்பக விமான” 1987இல் இந்தத் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலுடன் அமலா, சமீர் காகர், திரு ஆனந்த், கே.எஸ்.ரமேஷ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சின்கேதம் சீனிவாசராவ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த “புஷ்பக விமான” படத்தில் வசனங்கள் இடம் பெறவில்லை. நடிகர் நடிகைகளின் உணர்வுகள் மற்றும் பின்னணி இசை மூலமாகக் காட்சி ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் உள்ளது.

“வேட்டையாடு விளையாடு” 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைக் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். கமலுடன் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம். “வேட்டையாடு விளையாடு” படத்தில் போலீஸ் கேரக்டரில் அட்டகாசமான நடிப்பை கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படத்தைக் கௌதம் மேனன் எழுதி இயக்கியிருந்தார். கமல்ஹாசன் உடைய மிகவும் ஸ்டைலிஷான படங்களில் “வேட்டையாடு விளையாடு” முன்னிலை வகிக்கிறது.

“விஸ்வரூபம்” கமல்ஹாசன் இயக்கி நடித்த இந்தப் படத்தில் அவருடன் ராகுல் போஸ், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, நாசர், ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஸ்பை ஆக்சன் திரில்லர் ஜானரில் வெளியான “விஸ்வரூபம்” திரைப்படம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தித் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்றது. இந்தப் படத்தில் அண்டர்கவர் உளவுத்துறை ஏஜெண்டாகக் கமல்ஹாசன் நடித்திருப்பார். இன்றைக்கும் ஓடிடி தளத்தில் இந்தத் திரைப்படம் அதிகம் விரும்பப்பட்டு பார்க்கப்படுகிறது.

“இந்தியன்” ஊழல் ஒழிப்பு ஆக்ஷன் ஜானரில் வெளியான “இந்தியன்” திரைப்படம் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் ஊழல் மிக்க அதிகாரியான இரண்டு கேரக்டரில் (அப்பா, மகனாக) கமல்ஹாசன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, நெடுமுடி வேணு, சுகன்யா, ஊர்மிளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம். சில மாதங்களுக்கு முன்பாக இந்தப் படத்துடைய இரண்டாம் பாகம் வெளியானது. இருப்பினும் முதல் பாகம் பெற்ற வரவேற்பை ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்கு கொடுக்கவில்லை.

“விக்ரம்” இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அதிரடி படமாக “விக்ரம்” அமைந்தது. இந்தப் படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், சூர்யா, காயத்ரி, சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் லோகேஷ் கனகராஜன் எல்சியுவில் முக்கிய படமாக அமைந்தது. கமலுடைய சினிமா கேரியரில் அதிக வசூலை பெற்ற படமாக “விக்ரம்” அமைந்தது. இந்தப் படத்தைக் கமல்ஹாசன் உடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது கவனிக்கத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *