
ரோஜாவின் ராஜா… ரோஜா பூப்பிரியர்… குழந்தைகள் பிரியர் … இப்படியான அடைமொழிகளுக்கு சொந்தக்காரர். நேரு மாமா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் நேரு… எப்போதும் ரோஜா மலரைத் தன் சட்டையில் சூடிக் கொண்டிருப்பார்.
நவம்பர் மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம். ‘இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்’ என்று கூறிய அவரின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதிதான்(1889) இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஐ.நா. நிறுவனம் குழந்தைகள் தினத்தை நவம்பர் 20ஆம் தேதி சிறப்பிக்கின்றது. குழந்தைகள்மீது அளவற்ற அன்புகொண்டிருந்த பண்டிட் நேரு 1964ஆம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதிக்குக் குழந்தைகள் தினம் மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முன்னர், 1956ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 20ஆம் தேதிதான் இந்தியாவில் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டுக் குழந்தைகள் தினக்கொண்டாட்டத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாம் குறிப்பிடலாம். ஆம், இவ்வாண்டு மே மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் வத்திக்கானில் முதல் உலக குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்பட்டது. பண்பாடு மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையால் நடத்தப்பட்ட இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகள், நம் குழந்தைகளுக்கு நாம் எத்தகைய உலகை விட்டுச் செல்லப் போகிறோம் என்ற கேள்விக்குப் பதிலளிப்பதாக இருந்ததை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
உலகளவில் எடுத்துக்கொண்டோமானால், குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகப் பல உலக தினங்கள் உள்ளன. ஜூன் 4ஆம் தேதி, வன்தாக்குதலுக்குப் பலியாகும் அப்பாவி குழந்தைகளுக்கான உலக தினம், அதே மாதம் 12ஆம் தேதி பாலர் தொழிலாளர்குறித்த விழிப்புணர்வு நாள், மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்ற கவிஞரின் வாக்கை நினைவூட்டும்வகையில் அக்டோபர் 11ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம், நவம்பர் 18ஆம் தேதி குழந்தைகள் பாலியல் முறையில் சுரண்டப்படுவது, அத்துமீறப்படுவது மற்றும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் உலக தினம், இதற்கெல்லாம் மணிமகுடமாக நவம்பர் 20ஆம் தேதி, உலக குழந்தைகள் தினத்தைச் சிறப்பிக்கின்றோம். இந்தியாவிலோ நவம்பர் 14ஆம் தேதி, தேசிய குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.
எதிர்கால தேசத்தை ஆளவிருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும். நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிப்பவர்கள் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலத்தில் உலகை ஆளப் போகின்றவர்கள் குழந்தைகளே. இவர்களைக் கொண்டாடி மகிழும் நாள்தான் குழந்தைகள் தினம். “இந்தியாவின் நாளைய எதிர்காலம் சிறுவர்களே” என டாக்டர் அப்துல்கலாம் எப்போதும் கூறுவதுண்டு.
அன்பான பெற்றோர், உயர்த்தி விடும் தியாக எண்ணம் கொண்ட ஆசிரியர்கள், மிகச்சிறந்த அரசு, நம்பிக்கை தரும் நண்பர்கள் போன்றவர்களால் கட்டமைக்கப்படும் சூழல், சிறுவர்கள் வாழ்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த சமுதாயமாக இருக்கும். ஏனெனில், ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறார்.
இறைவன் இந்த உலகிற்கு தரும் செய்தியாக வந்து பிறந்திருக்கும் குழந்தைகள் இன்றைய உலகில் அனுபவிக்கும் துன்பங்களைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.
குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை திருமணம் ஆகியவை இன்று மிகப்பெரும் பிரச்சனைகளாக உள்ளன. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி… குழந்தைகளைப் போற்றி மகிழ்வோம்…

