கள்ளக்குறிச்சியை குறிவைக்கும் விசிக.. மருமகளுக்காக மருகும் திருமா.!

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில், அருள்விக்னேஷ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் நிலையில், அடுத்து நடக்கும் இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியைக் கைப்பற்ற விசிக காய்நகர்த்தத் தொடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு யோகம் அடித்தது போல, 2026 சட்டமன்ற தேர்தலில் வீசிய விஜய் சூறாவளியில், உள்ளூரிலேயே யாரென்று தெரியாத விஜய் ரசிகர்கள் பலரும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி  பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகி கோட்டைக்கு சென்றுவிட்டார்கள்.

ஆனால், சின்னப்புள்ள வெள்ளாம வீடு திரும்பாது என்பதற்கேற்ப, அவர்கள் போடும் ஆட்டங்கள் தவெக ஆட்சியை இப்போது சந்தி சிரிக்க வைத்திருக்கிறது. அதிலும் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, அவரது வீட்டுக்கே  மதுபோதையில் சென்று தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மிரட்டியதெல்லாம், இதென்ன சாரே கொடுமை…. ரகம்தான்.

இதற்காகத்தான் இன்று சட்டத்தின் கைகளில் சிக்கி, போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் அருள்விக்னேஷ். அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாதது உள்பட 5 பிரிவுகளில் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த விசாரணை மற்றும் வழக்கின் நெருக்கடி காரணமாக அருள்விக்னேஷ் தானோகவோ அல்லது தவெக தலைமையின் அழுத்தத்தாலோ தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் காவல் துறையின் விசாரணைக்குப் பின்னர் நிச்சயம் கைது செய்யப்படுவார்… அப்போது அவர் எம்.எல்.ஏவாக இருந்தால் தவெகவுக்கு இன்னும் கெட்டப் பெயரைத்தான் தரும் எனக் கூறப்படுகிறது.இந்த சூழலில் அருள்விக்னேஷ் ராஜினாமா செய்துவிட்டால் அந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், அங்கு யார் போட்டியிடுவது என தவெகவுக்குள்ளும் அதன் கூட்டணி கட்சிகளுக்குள்ளும் இப்போதே சடுகுடு ஆட்டம் தொடங்கியிருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜீவ்காந்தி 80,334 வாக்குகளும், திமுக கூட்டணியின் விசிக வேட்பாளர் மாலதி 77,666 வாக்குகளும் பெற்றனர். அருள்விக்னேஷ் 81ஆயிரத்து 132 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணியில் இருந்த விசிக, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தனது 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியது.

அதற்குப் பிரதிபலனாக விசிக எம்.எல்.ஏ வன்னியரசை, சமூக நீதித் துறை அமைச்சராக்கி  அழகு பார்த்து வருகிறது ஜோசப் விஜய் அரசு.
இந்த நிலையில்தான் இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி தனித் தொகுதியைப் பெற விசிக காய் நகர்த்துவதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த தேர்தலின்போது இங்கு விசிக வேட்பாளராக களம் இறங்கியவர் மாலதி. இவர் வேறுயாருமல்ல, திருமாவளவனின் உடன் பிறந்த சகோதரி மறைந்த பானுமதியின் மகளாவார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக இல்லாமல், அமைப்பாக இருந்த காலத்தில் இருந்தே திருமாவளவனுக்குப் பக்கபலமாக இருந்தவர் பானுமதி. தனது சகோதரி குறித்து திருமாவளவனும் பல இடங்களில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசி இருக்கிறார்.2020-இல் கொரொனா தொற்று காரணமாக பானுமதி உயிரிழந்த நிலையில்,  கால் நூற்றாண்டாய் எனக்காக வாழ்ந்த அக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது வேதனை தெரிவித்திருந்தார் திருமா.

அந்த வேதனைக்கு மருந்தாகவே தனது சகோதரி பானுமதியின் மகளை வேட்பாளராக்கினார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.
இதனால் இடைத்தேர்தலில் தனது மருமகள் மாலதிக்காக இப்போதே கள்ளக்குறிச்சியைப் பெற திருமாவளவன் முனைப்புக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.ஆனால், தவெக கூடாரத்தில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாம். வெற்றியோ, தோல்வியோ தவெகவில் இருந்தே களமிறக்கப்படவேண்டும். நமது எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை பலம்தான் நமக்கு எப்போதும் துணையாக இருக்கும்.

கூட்டணிக் கட்சிகளை நம்புவது எப்போதுமே ஆபத்தானது என்றும் பேசப்படுகிறதாம்.பார்ப்போம்  என்ன நடக்கிறது என்று…
தமிழக அரசியல் நிகழ்வுகளின் அப்டேட்டுகளை அறிந்து  கொள்ள ஜெம் தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *