kallakurichi:கள்ளச்சாராயம் குடித்த பெண்கள்; என்ன செய்தீர்கள்? போலீசை அலறவிட்ட குஷ்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 5 பெண்கள் உயிரிழந்த நிலையில் மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் இன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 61 நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளத் தேசிய மகளிர் ஆணையம் அதன் உறுப்பினரான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று தனது விசாரணையைத் தொடங்கி உள்ளார். அதன்படி முதல் நிலையாகக் காவல் நிலையம் வந்த விசாரணைக் குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கின் பின்புலம் குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது வரை இந்த விவகாரத்தில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர், புதிதாகக் கைதானவர்கள் எத்தனை பேர். ஏற்கனவே கைதானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்ப பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளோம். இன்று தான் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்பதால் இழப்பீடு தொடர்பாக எதுவும் கூற முடியாது. மேலும் நான் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இந்த விசாரணையை மேற்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஏற்கனவே உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த குஷ்பு, அவர்களிடம், காவல் நிலையம் அருகிலேயே பெண்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அப்போது காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என மாறி மாறிக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *