Kajal Aggarwal:அடேங்கப்பா… நடிகை காஜல் அகர்வால் இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?

Kajal Aggarwal Net Worth : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்புபற்றிப் பார்க்கலாம்.

பேரரசு இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த பழனி படம்மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். இதையடுத்து பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்த அவருக்கு ராஜமவுலி இயக்கிய மகதீரா திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். அப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. மகதீரா படத்துக்குப் பின்னர் தமிழில் பிசியான நடிகையாக உருவெடுத்த காஜல், கார்த்திக்கு ஜோடியாக நான் மகான் அல்ல, சூர்யாவுடன் மாற்றான், விஜய்க்கு ஜோடியாகத் துப்பாக்கி மற்றும் ஜில்லா, அஜித்துடன் விவேகம், தனுஷுக்கு ஜோடியாக மாரியெனத் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

தமிழைப் போல் நடிகை காஜல் அகர்வாலுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருந்து வந்தது. அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய நீண்ட நாள் காதலனான கவுதம் கிச்சிலு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்குக் கடந்த 2022ம் ஆண்டு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தை பிறந்தது.

மகன் பிறந்தபின்னர் சினிமாவில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்த காஜல், ஹே சினாமிகா, கோஸ்டி போன்ற படங்களில் நடித்தார். தற்போது காஜல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12ந் தேதி திரைக்கு வர உள்ளது.

அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் காஜலின் மார்க்கெட் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்குச் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.

நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்புகுறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ரூ.90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை காஜல் அகர்வால் ஒரு படத்துக்கு ரூ.2 முதல் ரூ.4 கோடிவரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு சொந்தமாக மும்பையில் ரூ.6 கோடி மதிப்பில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இதுதவிர அவரிடம் ஆடி ஏ4, ரேஞ்ச் ரோவர், ஸ்கோடா ஆக்டேவியா போன்ற விலையுயர்ந்த கார்களும் இருக்கின்றன. சினிமா தாண்டிக் காஜல் அகர்வாலுக்கு சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றும் உள்ளது. அதன் மூலமும் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் காஜல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *