Junior Asia Cup Cricket: நேபாள அணியை ஊதித்தள்ளிய இந்திய அணி!

Advertisements

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில்  நேபாள அணியை  வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

துபாய்: 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணியினர் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி அபாரமாக பந்துவீசி நேபாளத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நேபாள அணி 22.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நேபாள அணி தரப்பில் ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டுகளும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டுகளும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெறும் 7.1 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் 13 ரன்களும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *