தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தம் புதிய ஆடைகளும், பட்டாசுகளும், பலகாரங்களும்தான். குறிப்பாக, பட்டாசுகளுக்கு என்று தனி இடம் உண்டு. தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதி, மத பேதமின்றி அனைவரும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடுவர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு விதித்திருந்தது, அதன்படி, பொதுமக்களும் அந்த நேரத்துக்குள்ளாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சிறுவர்களும், சிறுமிகளும் பட்டாசுகளை வெடிக்க துவங்கி விட்டனர். மேலும், தமிழக அரசிடம் அனுமதி பெற்று பட்டாசு கடைகளும் ஆங்காங்கே போடபட்டிருந்தன. இக்கடைகளில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெற்றது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசுகளுக்கு தமிழ்நாட்டின் சிவகாசி பெயர் பெற்றது. அங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள். தமிழ்நாடு மட்டுமின்று மற்ற மாநிலங்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் உற்பத்தி குறைவாகும் என தெரிவித்துள்ளனர். தொடர் மழை அதிகாரிகளின் ஆய்வின் காரணமாக உற்பத்தி குறைவானதாகவும், தமிழகத்தில் கடைசி நேரத்தில் உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு எனவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.