Jani master:’ஆட்டம்’ ஆடியவர் ஓட்டமாய் ஓடினார்; டான்ஸ் மாஸ்டர் ஜானி தலைமறைவு!

ஹைதராபாத்; பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

திரையுலகில் பிரபல டான்ஸ் மாஸ்டராக அறியப்படுபவர் ஜானி. முன்னணி திரையுலக நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர். தேசிய விருதையும் வென்றிருந்தவர். 40 வயதான அவர்மீது 21 வயது உதவி நடன இயக்குநர் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாதில் உள்ள ராய்துர்கம் போலீஸ் ஸ்டேஷனில் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு பாய்ந்துள்ளதால் ஜனசேனா கட்சியில் இருந்தும் ஜானி நீக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ள தருணத்திலிருந்து, அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து துணை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கூறி உள்ளதாவது;

பெண் அளித்த புகாரை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறோம். மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள ஜானி தலைமறைவாக உள்ளார். சம்பவம் நடைபெற்ற காலத்தில் புகார்தாரரின் வயது 18 வயதை பூர்த்தி அடையவில்லை.

எனவே உரிய விசாரணையைத் தொடர்ந்து ஜானி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவாகுமா, இல்லையா என்பது தெரிய வரும். தகுந்த நடவடிக்கை கட்டாயம் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *