Jalakandeswarar Temple: ஆயுள் விருத்தி தரும் சிவன் கோவில்!

Advertisements

ஆயுள் விருத்தி தரும் சிவன் கோவில்! ஜலகண்டேஸ்வரர் கோயில்…

சென்னை பெங்களூர் சாலையில் சென்னையிலிருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழமையான நகரம் இந்த வேலூர். இந்த நகரின் பழமைக்குப் பெருமை சேர்க்கிறது நாம் காணும் இந்த கோட்டை. எவரும் கோட்டைக்குள் புக முடியாதபடி அகழி நீரால் சூழப்பட்டு இருப்பதையும், அந்த காலத்தில் அந்த நீரில் இருக்கும் முதலைகள் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் இருப்பதையும் இதனைக் காணும் போது உணர முடியும்.

ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரம் நீண்டு உயர்ந்து காட்சி தருகிறது. வரலாற்றுத் தொடர்புடைய இடங்கள் பல வெறும் சுற்றுலாத்தலமாக விளங்கும். ஆனால் இந்த வேலூர் கோட்டையோ சிறப்புமிக்க ஆன்மீக தலமாகவும் திகழ்கிறது.


கால ஓட்டத்தில் சுல்தான்களின் வசத்திலும், பின்னர் பிரிட்டிஷ் வசத்திலும் இருந்த காலத்தில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு அற்றுப்போய் சிவலிங்கமும் எடுத்து மறைத்து வைக்கப்பட்டதாம்.

பின்னர் 1981இல் பக்தர்களின் பெரும் போராட்டத்துக்குப் பின்னர், இங்கே ஜலகண்டேஸ்வரர் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.

அலங்காரரூபனாக பெருமாள் நின்றிருக்கும் அற்புத அழகை அங்குக் காணலாம். மூலவராக வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் பிரம்மாண்ட லிங்க ரூபியாய் திகழ்கிறார். மனம் உவந்து வழிபட்டால் நன்மை பெரும் என்பது நம்பிக்கை.

ஜலகண்டேஸ்வரர்  வீற்றிருக்கும் வேலூர் என்ற ஊரானது வேலங்காடு என்ற புராண பெயரைக் கொண்டது. இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இத்தலத்தில் உள்ள லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இங்கு அருள் பாவிக்கும் சிவ பெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்தக் கோவிலில் விஷ்ணு மஹாலக்ஷ்மி தாயாருடனும், பிரம்மா சரஸ்வதி தேவியுடனும், சிவபெருமான் பார்வதியுடனும் சேர்ந்து காட்சி தருகின்றனர். மும்மூர்த்திகளையும், முப்பெரும் தேவிகளையும் ஒன்றாக தரிசனம் பெறும் பாக்கியத்தை இந்த கோவிலுக்கு சென்றால் பெறலாம்.


இந்தக் கோவிலில் இருக்கும் கிணற்றில் உள்ள தண்ணீரானது, கங்கை நதிக்கு இணையாக கூறப்படுகிறது. இந்த ஈஸ்வரலிங்கம் லேசான கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. இந்த லிங்கத்தின் பின்புறத்தில் காலபைரவர் காட்சி தருகின்றார். கங்கை, சிவன், பைரவர் மூவரையும் ஒன்றாக தரிசிக்கும் அரிதான காட்சியும் இங்குதான் காணப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதாக வரலாறு கூறுகிறது.

தல வரலாறு:

சப்தரிஷி அத்திரி, இத்தலத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட காலத்திற்கு பின்பு, லிங்கம் இருக்குமிடம் வேலமரக்காடாக மாறிவிட்டது. லிங்கத்தை புற்று மூடி கொண்டது. பொம்மி என்ற சிற்றரசர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த போது, அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், புற்றில் மூடப்பட்டிருந்த லிங்கம் இருக்கும் இடத்தை, அந்த சிற்றரசருக்கு கூறி, கோவில் எழுப்பும்படி கூறினார். ஈசனின் கட்டளையை ஏற்ற பொம்மி இந்த கோவிலை எழுப்பினார்.


பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஆட்சி மாற்றத்தில் இந்த கோவிலின் கட்டமைப்புகள் நடைபெற்று வந்தாலும், பல காரணங்களால் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இந்த கோவிலில் வழிபாடுகள் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்னியர்களின் படையெடுப்பினால் இந்த கோவில்களில் இருந்த சிலைகளை பாதுகாப்பதற்காக ‘சாத்துவாசேரி’ என்ற கிராமத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் சிலைகள் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.


1981-ஆம் ஆண்டு தான் இந்த லிங்கம் மறுமுறை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் நடக்க தொடங்கின. பலன்கள் ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, திருமணத்தில் இருக்கும் தடை நீங்க, பல்லி தோஷம் நீங்க, கண் திருஷ்டி நீங்க  இந்த சிவபெருமானை வேண்டிக்கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *