Jaffer Sadiq – Drug Smuggling Case: ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் சோதனை!

Advertisements

சென்னை பெருங்குடியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களிலிருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஜாபர் சாதிக்கின் நண்பரான சதா, இந்தக் குடோன்களிலிருந்து போதைப்பொருளை மசாலா உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து அனுப்பி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சதா நேற்று கைது செய்யப்பட்டார்.

சதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக ஜாபர் சாதிக் உடன் இணைந்து சதா பணியாற்றியது தெரியவந்துள்ளது. மேலும், சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் ஒரு குடோன் மற்றும் திருச்சியில் ஒரு குடோன் ஆகியவற்றில் வைத்துப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள குடோனில் 5-க்கும் மேற்பட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்தக் குடோனிலிருந்து பல ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், ஜாபர் சாதிக்கை தமிழகம் அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், குடோன் மூலம் நடந்த கடத்தல் தொடர்பாகவும் அவரைத் தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பின்புலம்: முன்னதாக, உணவுப் பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் இந்தியாவிலிருந்து போதைப் பொருளைக் கடத்திய விவகாரத்தில் ஏற்கெனவே டெல்லியில் வைத்துத் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மூளையாகச் செயல்பட்ட ஜாபர் சாதிக் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் இந்தி சினிமா தயாரிப்பாளர்கள், முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அரசியல் கட்சிக்குப் பல லட்சம் ரூபாய் நிதி அளித்ததாகவும், போதைப் பொருளுக்கான மூலப் பொருட்களை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகக் கடத்தியது தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறையும் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்தது. மேலும், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப் போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் தலைமறைவாகினர். இருவரும் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அவர்களுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சதா என்கிற சதானந்தம் (50) என்பவர் போதைப் பொருள் கடத்தலில் உதவியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய அண்மையில் போலீஸார் திருச்சி வந்தனர். அவர் அங்கு இல்லாததால் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *