துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘ஃபிளைதுபாய்’ விமானத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. விமானத்தின் காக்பிட்டுக்குள் (Cockpit) இருந்த இணை விமானி, முதன்மை விமானியை திடீரென கத்தியால் குத்தித் தாக்கியுள்ளார். மேலும், விமானத்தை கீழே வீழ்த்தி விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
காக்பிட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, விமானப் பணிப்பெண்களும் அதில் பயணித்த இஸ்ரேலியப் பயணிகளும் உடனடியாகச் செயல்பட்டு காக்பிட்டுக்குள் நுழைந்தனர். தாக்குதல் நடத்திய விமானியை பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாகப் போராடி மடக்கிப் பிடித்துக் கட்டினர். காயமடைந்த நிலையிலும் முதன்மை விமானி சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக சவுதி அரேபியாவில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், தாக்குதலில் ஈடுபட்ட விமானியை சவுதி அரேபிய அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த விமானிக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள விளக்கத்தில், “பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் வீர தீரமான நடவடிக்கையால் மிகப்பெரிய பேரழிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக இருக்கும் பயணிகள் அனைவரையும் விரைவாக இஸ்ரேலுக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.



