
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுல் என்பவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராகுல் (27). இவர் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி என்பவருடைய மகளான தேவிகாஸ்ரீ என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் திருமணமாகியுள்ளது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஈரோட்டிலிருந்து கவுந்தப்பாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது, கவுந்தப்பாடிக்குச் செல்லும் நுழைவுப் பாலத்தில் ராகுல் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கட்டுப்பாடை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் நடுவில் உள்ள சென்டர்மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ராகுலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராகுலின் சடலத்தைக் கைப்பற்றி, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுலை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இவருக்கெனத் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். சமீபத்தில் இவர் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவை இமிட்டேட் செய்து பதிவிட்ட வீடியோ கடந்த ஒரு மாதகாலத்தில் 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
இன்ஸ்டா பிரபலம் அதிவேகமாகப் பைக்கில் சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமில்லாமல் இணையவாசிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
