
மாஸ்கோ: ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்ற 7 இந்தியர்களைத் தரகர் ஏமாற்றியதால், அவர்கள் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினர். அவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல் நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. இந்தப் போரில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். மத்திய அரசின் முயற்சியால் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதே போல இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர், ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் சிக்கி உள்ளனர். அவர்கள் வலுக்கட்டாயமாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
அவர்கள், ககன்தீப் சிங்(24), லவ்பிரீத் சிங்(24), நரைன் சிங்(22), குர்பிரீத் சிங்(21), ஹர்ஷ் குமார்(20), அபிஷேக் குமார்(21), மற்றுமொரு குருபிரீத் சிங்(23) ஆகியோர் போரில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 5 பேர் பஞ்சாபையும், மற்ற 2 பேர் ஹரியானாவையும் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு டிச.,27 ல் புத்தாண்டை கொண்டாட அவர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். அதற்காக விசா பெற்றுள்ளனர். அங்கிருந்து, அவர்களைப் பெலாரஸ் நாட்டிற்கு ஏஜென்ட் அழைத்துச் சென்றுள்ளார். அந்நாட்டிற்கு செல்வதற்கு அவர்களிடம் விசா இல்லை. ஆனால், விசா தேவை என்ற தகவலும் தங்களுக்கு தெரியாது என்கின்றனர்
பாதிக்கப்பட்டவர்கள். விசா இல்லாமல் பெலாரஸ் சென்ற இடத்தில், அவர்களிடம் ஏஜென்ட் கூடுதல் பணம் கேட்டுள்ளார். அதைக் கொடுக்காததால் அந்த இடத்திலேயே 7 பேரையும் விட்டுவிட்டு ஏஜென்ட் தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து போலீசார், அவர்களைக் கைது செய்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்தனர். ரஷ்ய ராணுவ அதிகாரிகள், அவர்களிடம் வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்கி உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தி உள்ளனர். தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் சமூக வலைதளம் வாயிலாக வீடியோ வெளியிட்டு உள்ளனர்.


