India Vs China: எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி!

பீஜிங்: பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இந்தியா, நாட்டின் மற்ற மாநிலங்களுக்குச் செல்வதைப் போலவே அந்த மாநிலத்திற்கும் பிரதமர் சென்றாரெனத் தெரிவித்து உள்ளது.

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. நம் நாட்டு தலைவர்கள் அங்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (மார்ச்09) அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். முடிவடைந்த வளர்ச்சி திட்டங்களைத் துவக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

இது தொடர்பாகப் பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வெய்பின் கூறுகையில், இந்திய சீனா எல்லையின் கிழக்கு பகுதிக்கு இந்திய தலைவர் வருகையைக் கண்டிக்கிறோம். இது, தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். இதனை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்குப் பதிலடிகொடுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீன் ஜெய்ஸ்வால் கூறுகையில்,

பிரதமரின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவின் கருத்துகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். மற்ற மாநிலங்களுக்குச் செல்வது போல், அருணாச்சல பிரதேசத்திற்கும் இந்திய தலைவர்கள் செல்கின்றனர்.

இத்தகைய பயணத்திற்கும், வளர்ச்சி திட்டங்களைத் துவக்குவதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உரிய காரணம் ஏதும் இல்லை. அருணாச்சல பிரதேசம், தற்போதும், இனியும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்பதையும் மாற்ற முடியாது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டைச் சீனாவிடம் பல முறை தெரிவித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *