கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி ஒரே பகுதியைச் சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் அந்தப் பகுதியில் மறைத்து வைத்துக் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தக் கள்ளச்சாராயத்தை அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்ததாகக் கூறப்படுகிறது.
அதில் தற்போது கள்ளச்சாராயம் அருந்தியதில் ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர், மற்றுமொரு ஜெகதீஷ் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

