
நச்சுவாயுக்களை வெளியிடும் குப்பை எரிஉலைத் திட்டங்களுக்குக் கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலனுக்கும் பெருங்கேடுகளை ஏற்படுத்தும் குப்பை எரிஉலைத் திட்டங்களுக்குப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதிலிருந்து விலக்கு அளிப்பதாக மத்தியச் சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுச்சூழலையும், இயற்கைவளங்களையும் பாதுகாப்பதில் அக்கறை இல்லாதது இந்த நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி சுற்றுச்சூழலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அது குறித்துப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அதனடிப்படையில் தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
நிலக்கரி அனல் மின்நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் கொடுங்கையூரிலும், பெருங்குடியிலும் குப்பை எரி உலைகளைத் திட்டமிட்டுள்ள திமுக அரசு, மத்திய அரசின் புதிய விதியைப் பயன்படுத்தி உடனடியாகச் செயல்படுத்தும் ஆபத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.




