
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் விற்றால் அதற்கு 25 விழுக்காடு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் . அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ உற்பத்தி செய்யப்படக்கூடாது. அது அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன்.
அப்படி இல்லையெனில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்த வேண்டும்” என்றும் , இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கைவிட வேண்டும் என்றார். அமெரிக்காவுக்குள் ஐபோன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் , அமெரிக்காவை விட்டு வெளியே தயாரிக்கப்படும் செல்போன்களுக்கு வரி அதிகம் இருக்கும் என்றும் எச்சரித்தார்.
சீன தயாரிப்பு பொருட்கள் அமெரிக்காவில் விற்கப்பட்டால் அதற்கு வரி விதிக்கப்படும். எனவே சீனாவில் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை வைத்திருந்த ஆப்பிள் நிறுவனம், சைலன்ட்டாக இந்தியாவுக்கு தாவியது. இந்தியாவில் தயாரித்தால் வரி கிடையாது. அதேபோல கூலியும் குறைவுதான். ஆனால் சீனா அளவுக்கு ஹை-டெக் தொழில்நுட்பம் இங்கு இல்லை. அதை ஈடு செய்யும் வகையில் தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
எனவே ஐபோன் உற்பத்தில் இந்தியா மாஸ் காட்டி வருகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாத டிரம்ப், இந்தியாவில் உற்பத்தி செய்தாலும் சரி, அமெரிக்கா தவிர வேறு எந்த நாடுகளில் உற்பத்தி செய்தாலும் சரி, ஆப்பிள் நிறுவனம் 25% வரியை கட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.




