Cuddalore: வாட்ஸ்அப் மூலம் நிதி..காவலர்களின் மனிதநேயம்!

Advertisements

கடலூர் அருகே உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரூபாய் 3.5 லட்சம் நிதி குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்.

தமிழகத்தில் முதன்முறையாக மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்த காவலரின் குடும்பத்திற்கு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நிதி உதவி வழங்கினர்.

கடலூர் மாவட்டம் சி.என்.பாளையம் சொக்கநாதன் பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவர் பண்ருட்டி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏட்டாகப் பணி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இறந்துபோன சிங்காரவேலன் என்பவருக்கு இந்துமதி (32) என்ற மனைவியும், தர்ஷன் என்ற மகனும் (9), கனிஷ்கா (6) என்ற மகளும் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல்துறை நண்பர்கள் வாட்ஸ்அப் குரூப் மூலம் மறைந்த சிங்காரவேலன் குடும்பத்தாருக்கு உதவி செய்யும் நோக்கில் நிதி திரட்ட முடிவு மேற்கொண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முதல் காவலர்கள்வரை வாட்ஸ்அப் மூலம் உதவி கோரியதின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என அனைவரும் தங்களாகவே முன்வந்து ரூபாய் 3.5 லட்சம் நிதி திரட்டினர்.

இதனை அடுத்து இன்று உயிரிழந்த சிங்காரவேலின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் அவரின் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை நேரில் வழங்கி அவரின் வீட்டில் மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது பண்ருட்டி துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, ஆய்வாளர்கள் ராஜதாமரைபாண்டியன், கண்ணன், பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாகத் தங்களுடன் காவல் பணியில் சேர்ந்த சக காவலர்கள் யாரேனும் உயிரிழந்தால் மட்டுமே ஒன்று சேர்ந்து உதவி செய்த வந்த நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மாவட்டம் முழுவதும் பணிபுரியும் காவல்துறையினர் ஒன்று சேர்ந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *