
கார்த்திகை மாதத்தில் இப்படி விளக்கேற்றினால் உங்களுடைய வீட்டில் குலதெய்வம் வருகை தரும் என்பது ஐதீகம்.
பொதுவாகவே தமிழ் மாதங்களில் சிவபெருமானுக்கு என்று உகந்த மாதமாக இருக்கக்கூடியது தான் கார்த்திகை மாதம். ஏனென்றால் சிவபெருமானிற்காக ஒவ்வொரு கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று சோமவார விரதம் என்ற வகையில் வலம்புரி சங்கின் மூலம் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.
அதேபோல் கார்த்திகை மாதத்தில் தான், ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பல விதமான வேண்டுதலை வைத்துக் கொண்டு விரதங்கள் மேற்கொண்டு ஐயப்பன் மாலை போட்டுப் பிறகு சபரிமலை வரை சென்று வருவது என்பது வழக்கம்.
அதில் குறிப்பாக, கார்த்திகை மாதம் என்றாலே திருக்கார்த்திகை தீபத்திருநாள் தான். திருக்கார்த்திகை அன்று தான் அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றிப் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் அருள் பெறுவார்கள். அன்றைய தினம் தான் அனைவரும் வீட்டிலும் அண்ணாமலையார் கோயிலில் விளக்கு ஏற்றியபிறகு வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்வோம்.
ஆனால் அன்று மட்டும் அல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதுமே தினமும் காலையிலும், மாலை வேளையிலும் நிலை வாசலுக்கு வெளியில் 2 அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். வைக்கும் அகல் விளக்குகளைத் தரையில் சிறிய வாழை இலை, அரச இலை, ஆல இலை அல்லது ஒரு சிறிய தட்டின் மேல் தான் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். நாம் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் சூரிய உதயத்திற்கு முன்பாகவே வாசலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
6 மணிக்கு முன்பாக விளக்கை ஏற்றுவது சிறந்த பலனைத் தரும்.அதன் பின்பு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்குப் பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, பூஜை அறையிலும் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
அப்படி தினம்தோறும் கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்குகளை ஏற்றி, பெரிய கார்த்திகை அன்று வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றும்பொழுது நம்முடைய வீட்டினுள் சிவபெருமான் வடிவில் குலதெய்வம் வரும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

