
ஹார்மஸ் நீரிணை வழியாகச் சென்ற எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
மத்தியக் கிழக்கில் உள்ள அரபு நாடுகளில் எடுக்கப்படும் பெட்ரோலிய எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஈரானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் நடுவில் உள்ள ஹார்மஸ் நீரிணை வழியாகவே அரபிக் கடலுக்கு வருகின்றன. உலகின் 90 விழுக்காடு எண்ணெய்ப் போக்குவரத்து இந்த நீரிணை வழியாக நடைபெறுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கு உதவும் சவூதி அரேபியா, கத்தார், பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஹார்மஸ் நீரிணை வழியாகச் சென்ற எண்ணெய்க் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாகப் பெட்ரோலியத்தின் விலை எட்டு விழுக்காடு அதிகரித்து 79 டாலராக உள்ளது.
இதனிடையே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் ஈரான் தாக்கியுள்ளது. பக்ரைனிலும், துபாயிலும் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.



